ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் சாலை மறியல்
ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி நேற்று நெமிலி அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பணம் கட்டி ஏமாற்றம்
வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் கட்டினால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் நெமிலி பகுதி உதவியாளராக ஜெகன்நாதன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் மூலமாக மக்கள் பணத்தை கட்டி வந்தனர். திடீரென்று 6 மாதத்திற்கு முன்பு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர். இதனால் பணம் கட்டி ஏமாந்த மக்கள் தங்கள் பணத்தை திருப்பி தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று முதலீட்டாளர்கள் நிறுவன உதவியாளர் ஜெகன்நாதனை கண்டுபிடித்து எங்கள் பணத்தை மீட்டு தரக்கோரி திடீரென்று நெமிலி அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் நெமிலி அண்ணா சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.