வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை ஐ.ஜி. ஆய்வு
வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
திருச்சி சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி சரகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீசார், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் திருச்சி ஆயுதப்படை மைதானத்துக்கு வந்திருந்தனர். அங்கு அவர்கள், பயன்படுத்தும் கருவிகள் மற்றும் உபகரணங்களை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கருவிகள் அனைத்தும் வேலை செய்கிறதா? அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்? முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று பார்வையிட்டார். பின்னர் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீசாருக்கு எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுரை கூறினார். இந்த ஆய்வின்போது, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.