சென்னை ஐ.ஐ.டி. - பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


சென்னை ஐ.ஐ.டி. - பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 26 March 2024 9:15 PM GMT (Updated: 26 March 2024 9:15 PM GMT)

ஸ்டார்ட் பஸ்ட் நிறுவனம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இடையே, ‘புத்தொழில் மேம்பாட்டு மையம்' அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

சென்னை,

நாட்டின் விமான போக்குவரத்து, விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், பிரான்ஸ் வான்வெளி, பாதுகாப்பு துறையின் ஸ்டார்ட் பஸ்ட் நிறுவனம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இடையே, 'புத்தொழில் மேம்பாட்டு மையம்' அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, பிரான்ஸ் நாட்டின் ஸ்டார்ட்பர்ஸ்ட் ஏரோஸ்பேஸ் தலைமை செயலர் அலுவலர் பிரான்சிஸ் சோப்பார்ட் ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. புத்தொழில் மேம்பாட்டு மையம் அமைப்பதற்காக, பிரான்சின் ஸ்டார்ட் பஸ்ட் நிறுவனம் ரூ.900 கோடி நிதியுதவி அளிக்கிறது. இந்த புத்தொழில் மேம்பாட்டு மையம் சென்னையில் நிறுவப்பட உள்ளது.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி கூறியதாவது:-

நாட்டின் பொருளாதாரத்தை பல டிரில்லியன் டாலர்களாக உயர்த்தும் பயணத்தில், இளம் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெறுபவர்களாக அல்லாமல், வேலை வாய்ப்புகளை வழங்குபவர்களாக மாற்ற ஊக்கம் அளிக்க வேண்டும்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், தொழில்முனைவோர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், வணிக ரீதியிலான யோசனைகள், வடிவமைப்புகள் குறித்து அறிந்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story