சென்னை மெரினாவில் பயங்கரம்... 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதால் பரபரப்பு
சென்னை, மெரினா கடற்கரை அருகே பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் இளமாறன் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் இளமாறன். 23 வயதான இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோ ஷூட் எடுக்கும் தொழில் செய்து வருகிறார் . இவர் இன்று காலை மெரினா கடற்கரைக்கு நண்பர் தீபக் குமார் - சோனியா தம்பதியின் திருமண நாளுக்கு போட்டோ எடுக்க வந்துள்ளார்.
இவர்களுடன் நண்பர்கள் தினேஷ், விஜய், பிரபா, கார்த்தி என மொத்தம் 7 பேர் வந்துள்ளனர். நம்ம சென்னை பின்புறம் உள்ள மணல் பகுதியில் இவர்கள் போட்டோ ஷூட்எடுத்து வந்ததாக தெரிகிறது . அப்போது இளமாறனிடம் எந்த ஏரியா என்று கேட்டு கும்பல் ஒன்று தகராறு செய்துள்ளது.
அத்துடன் அவரது செல்போனை தருமாறு கேட்டுள்ளது. ஆனால் அவர் செல்போனை தர மறுத்ததால் , மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளமாறனை அவர்கள் மிரட்டி உள்ளனர் . அத்துடன் அவரது இடது கையை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளமாறன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது. இதுகுறித்து மெரினா கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.