பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மீது ஒளிரும் 'ஸ்டிக்கர்'
பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மீது ஒளிரும் ஸ்டிக்கரை அதிகாரிகள் ஒட்டினர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மீது ஒளிரும் ஸ்டிக்கரை அதிகாரிகள் ஒட்டினர்.
பழனிக்கு பாதயாத்திரை
தைப்பூசத்தையொட்டி ஆண்டுதோறும் கோவை, பொள்ளாச்சியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு செல்வார்கள். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பழனியில் தைப்பூச விழா நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கி கொள்வதை தடுக்க பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கி, பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
ஒளிரும் 'ஸ்டிக்கர்'
பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையின் ஓரத்தில் செல்ல வேண்டும். வெள்ளை நிற கோட்டை தாண்டி செல்ல கூடாது. இரவு நேரங்களில் கவனமாக நடந்து செல்ல வேண்டும். தூக்கம் வந்தால் பாதுகாப்பான இடங்களில் ஓய்வு எடுத்து விட்டு, அதன்பிறகு பாத யாத்திரையை தொடங்க வேண்டும். பக்தர்கள் மற்றும் அவர்கள் கொண்டு செல்லும் பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.
துணியால் ஆன ஒளிரும் ஸ்டிக்கர்களை பக்தர்களின் கைகளில் கட்டி வருகிறோம். கெடிமேடு வழியாக செல்லும் பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. எனவே பக்தர்கள் கால்வாயில் இறங்கி குளிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.