பொதுமக்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை- மேயர் இந்திராணி உத்தரவு
பொதுமக்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் இந்திராணி உத்தரவிட்டுள்ளார்.
.
மழைக்காலம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 4-க்கு உட்பட்ட பகுதிகளான கீரைத்துறை, காமராஜர்புரம், புதுமகாளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். கீரைத்துறை, காமராஜர்புரம், புதுமகாளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடையில் கசிவுகள் ஏற்பட்டு கழிவுநீர் வெளியே செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் அந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை பாதுகாப்பான முறையிலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் அவர் அதிகாரிகளிடம் மழைக்காலம் என்பதால் குடிநீர், பாதாள சாக்கடை அடைப்புகள், சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் தரும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தடுப்பு பணிகள்
தொடர்ந்து மேயர், கீரைத்துறையில் தனியார் பராமரிப்புடன் செயல்பட்டு வரும் மின் மயானத்தில் சுகாதாரம், பாதுகாப்பு, பதிவேடு பராமரிப்பு, பணிபுரியும் பணியாளர்கள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது அவர், மின்மயானத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் அறிவுறுத்தினார். பின்னர் மேயர், கீரைத்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகளான கொசு புகைமருந்து அடித்தல், கொசு புழு உற்பத்தியாவதை தடுத்தல் உள்ளிட்ட தடுப்பு பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பூமிநாதன் எம்.எல்.ஏ., தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலட்சுமி, உதவி நகர்நல அலுவலர் பூபதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், அ.தி.மு.க. கவுன்சிலர் சண்முகவள்ளி, உதவி செயற்பொறியாளர்கள் மயிலேறிநாதன், சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.