அடைக்கலாபுரம் கிராமத்துக்கு உடனடி பஸ் வசதி:கனிமொழி எம்.பி. நடவடிக்கை


அடைக்கலாபுரம் கிராமத்துக்கு  உடனடி பஸ் வசதி:கனிமொழி எம்.பி. நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் அருகே அடைக்கலாபுரத்தில் நடந்த அரசு விழாவில் ஒரு பெண் விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக பஸ் வசதி செய்து கொடுத்த கனிெமாழி எம்.பி.க்கு கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே அடைக்கலாபுரத்தில் நடந்த அரசு விழாவில் ஒரு பெண் விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக பஸ் வசதி செய்து கொடுத்த கனிெமாழி எம்.பி.க்கு கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.

அரசு விழா

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட சோலை குடியிருப்பு, வள்ளியம்மாள்புரம், அடைக்கலாபுரம் ஆகிய பகுதிகளில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சாலை பணிகள் தொடங்கி வைத்தல் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டு, அடைக்கலாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் 14 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஆறு பேருக்கு கடனுதவி, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 2 பேருக்கு மூன்று சக்கர நாற்காலியும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பண்ணை கருவிகள் 6 பேருக்கும், 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் என ரூ.20 லட்சத்து 23 ஆயிரத்து 88 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பெண் கோரிக்கை மீது நடவடிக்கை

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண், அடைக்கலாபுரத்துக்கு பஸ் வசதி இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எங்கள் கிராமத்துக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும்' என்றார். இதை கேட்ட எம்.பி., அதிகாரிகளை அழைத்து உடனடி நடவடிக்கை எடுத்தார். இதை தொடர்ந்து சாத்தான்குளத்தில் இருந்து முதலூர், வேப்பங்காடு வழியாக உடன்குடி சென்று வந்த பஸ்சை அடைக்கலாபுரம் மார்க்கமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உடனடி பஸ் வசதி

இதன்படி நேற்று சாத்தான்குளத்திலிருந்து புறப்பட்ட பஸ் முதலூர், வேப்பங்காடு வழியாக அடைக்கலாபுரம் வந்தது. மீண்டும் அடைக்கலாபுரத்திலிருந்து புறப்பட்டு உடன்குடி சென்றது. மறுமார்க்கத்திலும் இதே வழித்தடத்தில் இந்த பஸ் இயக்கப்பட்டது. தினமும் இந்த பஸ் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக கனிமொழி எம்.பி.க்கு அடைக்கலாபுரம் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் உதவிகலெக்டர் குருசந்திரன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், யூனியன் தலைவர்கள் பாலசிங், ஜனகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன்ராணி, செம்மறிக்குளம் பஞ்சாயத்து தலைவர் அகஸ்டா மரியதங்கம், வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story