தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள் பலதரப்பட்ட மக்களின் கருத்துகள்


தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள்  பலதரப்பட்ட மக்களின் கருத்துகள்
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள் குறித்து பலதரப்பட்ட மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கடலூர்

3,703 சதுர கி.மீட்டர் பரப்பளவை கொண்ட கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் உள்ளன. கடலூர் மாவட்டம் ஒரு வடிகாலாக உள்ளது. ஆம், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உற்பத்தியாகும் ஆறுகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலில்தான் சங்கமிக்கின்றன. இதனால் தான் தமிழகத்திலேயே அதிகளவில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக கடலூர் உள்ளது.

ஆனால் ஆட்சிகள் பல மாறினாலும், இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. அதற்கு சான்றாக கடலூர் மாநகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீரை வடிய வைப்பதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணி முடிந்தபாடில்லை. மேலும் மாநகராட்சியாக கடலூர் தரம் உயர்த்தப்பட்டாலும் மாநகராட்சிக்கான எந்தவொரு தகுதியையும் எட்டவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

எட்டாக்கனியான அடிப்படை வசதிகள்

இதேபோல் மாவட்டத்திற்கான அனைத்து தகுதிகளையும் உடைய விருத்தாசலத்தில் தொழில்துறையில் வளர்ச்சி கண்டாலும், மக்களுக்கு அடிப்படை வசதிகள் என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இங்குள்ள செராமிக் தொழிற்பேட்டை, எண்ணெய் பிழியும் ஆலை ஆகியவற்றை அரசு கண்டுகொள்ளாததால், விருத்தாசலம் பகுதி இளைஞர்கள் வேலை தேடி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் நலிவடைந்து வரும் தொழில்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலத்தை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பல ஆண்டு கனவாக உள்ளது.

உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ள சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகமும் உள்ளது. இங்கு வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். அத்தகைய சிறப்பு பெற்ற சிதம்பரம் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. மேலும் நகரில் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதிகாரிகள் மெத்தனம்

இதுதவிர வேப்பூர், சிறுபாக்கம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகள் மாவட்டத்தின் கடைகோடியில் இருப்பதால், அரசின் எந்தவொரு திட்டங்களும் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். மேலும் குடிநீர், சாலை, தெருமின் விளக்கு உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் மக்களுக்காக செய்து கொடுக்கப்படவில்லை. காரணம், உயர் அதிகாரிகள் யாரும் ஆய்வுக்காக அந்த பகுதிகளுக்கு செல்லாததால், அங்கு பணிபுரியும் அனைத்து துறை அதிகாரிகளும் மெத்தன போக்குடன் பணிபுரிகின்றனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சாலைகள் பல்லாங்குழி போல் காணப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்கள் நடத்தியும், இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து கடலூர் மாவட்ட மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

உருக்குலைந்த சாலை

கடலூர் முருகன்: கடலூர் புருகீஸ்பேட்டை செல்லும் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பே தார் பெயர்ந்து சேதமடைந்தது. தற்போது சாலையே இல்லாத அளவிற்கு முற்றிலும் உருக்குலைந்து போய் மண் சாலையாக காணப்படுகிறது. அதிலும் அவ்வழியாக கிராவல் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளால் பெரிய பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்வதே பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால், பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதேபோல் கடலூரில் பல இடங்களில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. அதனால் அனைத்து சாலைகளையும் சீரமைப்பதோடு, பன்றிகள் தொல்லையையும் கட்டுப்படுத்த வேண்டும்.

எரியாத மின்விளக்குகள்

பெண்ணாடம் பிரபாகரன்: பெண்ணாடம் அடுத்த பொன்னேரி கிராமத்தில் திட்டக்குடி- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் மேம்பாலத்தில் 100-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக அந்த மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நிகழ்கிறது. மேலும் மேம்பாலத்தில் இருள் சூழ்ந்திருப்பதை பயன்படுத்தி வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அதனால் குற்ற சம்பவங்களை தடுக்க மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும்.

கழிவுநீர் கலந்த குடிநீர்

சிதம்பரம் மேகநாதன்: சிதம்பரம் நகரில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. கடந்த சில வருடங்களாகவே சிதம்பரத்தில் உள்ள சில வார்டுகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் தான் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் சிதம்பரம் நகரில் சுற்றித்திரியும் பன்றிகள், நாய்கள் மற்றும் கால்நடைகளால் மக்கள் தினம் தினம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் நான்கு முக்கிய வீதிகளிலும் சுற்றித்திரிவதால் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர். இது தவிர கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சிதம்பரம் நகரில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும்.

விவசாயிகள் பாதிப்பு

திட்டக்குடி வெள்ளையம்மாள்: திட்டக்குடி அடுத்துள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தை ஆழப்படுத்த வேண்டும். நீர்த் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் வாய்க்கால் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கடை கோடி வரை பாசனத்திற்கு தண்ணீர் செல்லாததால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்காலை தூர்வாரி பராமரிக்க வேண்டும்.

மகளிர் கல்லூரி

விருத்தாசலம் அசோகன்: விருத்தாசலம் விரைவில் மாவட்டமாக உதயமாகும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். ஆனால் விருத்தாசலத்தில் அமைந்துள்ள அரசு ஆஸ்பத்திரியில் இடவசதி பற்றாக்குறை மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் உரிய சிகிச்சைகள் பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். விருத்தாசலத்தில் அரசு மகளிர் கல்லூரி கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் பல நாள் எதிர்பார்ப்பாகும். விருத்தாசலம் பஸ் நிலையம் இட நெருக்கடியில் சிக்கியுள்ளது. மேலும் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். மணிமுக்தாற்றை தூய்மைப்படுத்தி கழிவுநீரை வெளியேற்ற பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும். விருத்தாசலம் காவல் நிலைய எல்லை மிகப்பெரியதாக உள்ளது. அதனால் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து நகர காவல், புறநகர் காவல் நிலையம் அமைத்துக் கொடுத்தால் நகரப் பகுதியில் நடைபெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது.


Next Story