விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை அதிகாரிகளுக்கு மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை  அதிகாரிகளுக்கு மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Oct 2022 6:45 PM GMT (Updated: 12 Oct 2022 6:45 PM GMT)

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பூட்டி கிடக்கின்றது. 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட பயிர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளதால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதுதொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் இணை இயக்குநர் கண்ணகி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உடனடியாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மீண்டும் திறப்பது மற்றும் பல மாதங்களாக விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் தலைமறைவான வியாபாரிகளை கண்டறிந்து அவர்களிடம் இருந்து பெற வேண்டிய பணத்தை திரும்பப் பெற்று விவசாயிகளிடம் வழங்குவது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது பேசிய மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. நிலுவை தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். அப்போது உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், நகர மன்ற உறுப்பினர் டேனியல் ராஜ், விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ரவி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story