லால்குடியில் குடிகள் மாநாட்டில் 373 மனுக்களுக்கு உடனடி தீர்வு
லால்குடியில் குடிகள் மாநாட்டில் 373 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன.
லால்குடி, ஜூன்.25-
லால்குடி வருவாய் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து குடிகள் மாநாடு நடந்தது. கோட்டாட்சியர் வைத்தியநாதன் பேசுகையில், லால்குடி தாலுகாவில் 16 இடங்களில் 2 லட்சம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடப்பட்டுள்ளது, என்றார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது லால்குடியில் நெல் கொள்முதல் நிலையத்தை நிரந்தரமாக அமைக்க வேண்டும். லால்குடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டால் ஏழை, எளிய மாணவிகள் மேல்நிலைக்கல்வியை தொடர பயனுள்ளதாக இருக்கும். லால்குடி தாலுகாவில் சில கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் கிராமத்தில் தங்கியிருந்து வேலை செய்வதில்லை. மேலும் அவர்களால், புதிதாக பட்டா மாற்றம் உள்ளிட்ட சான்றுகள் பெற பொதுமக்கள் மிகவும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். சிலர் பணம் பறிக்கின்றனர், என்றனர். பின்னர் புள்ளம்பாடி, பெருவளப்பூர், கல்லக்குடி, வாளாடி, கீழன்பில், லால்குடி ஆகிய பகுதிகளில் உள்ள 92 கிராமங்களில் இருந்து வந்த மக்கள் அளித்த 727 மனுக்கள் மீது விசாரணைக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். 47 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 373 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் தாசில்தார் சிசிலினா சுகந்தி, சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் பன்னீர்செல்வம், விவசாய சங்க பிரதிநிதிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.