பல்வேறு வழக்குகளில் உத்தரவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்-கீழ் கோர்ட்டுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பல்வேறு வழக்குகளில் உத்தரவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கீழ் கோர்ட்டுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பல்வேறு வழக்குகளில் உத்தரவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கீழ் கோர்ட்டுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஜாமீன் வழங்கக்கூடாது
மதுரையை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் 300 கிலோ கஞ்சா கடத்தலுக்கு உதவி செய்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்து, பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைதாகி உள்ளார். அப்போதே அவர் கீழ் கோர்ட்டில் தனக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்து 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் பெற்று சென்றுள்ளார்.
இது போன்ற சில தகவல்களை மறைத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் அதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசு வக்கீல் தெரிவித்து உள்ளார்.
தள்ளுபடி
ஒரு வழக்கு சம்பந்தப்பட்ட முந்தைய நடவடிக்கைகளை, அதாவது வழக்கின் தகவல்களை அறிய சம்பந்தப்பட்ட உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு வழக்குகளின் நிலைகளையும் பதிவேற்றம் செய்வதால் அந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு வசதியாக இருக்கும். ஆனால் மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்குகளின் நிலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி முந்தைய நடவடிக்கைகளை மறைத்து மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கின் தீவிரத்தை கருதி மனுதாரரின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேநேரம் கீழ் கோர்ட்டுகள் தங்களின் உத்தரவுகளை ecourts.gov.in இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் பல்வேறு தகவல்களை, ஆவணங்களை சேகரித்து கோர்ட்டுக்கு அளித்த அரசு வக்கீல் செந்தில்குமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை அனைத்து கீழ் கோர்ட்டுகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.