தர்மசாஸ்தா அய்யனார், பீடஹாரி அம்மன் கோவில்களில் குடமுழுக்கு
குத்தாலம் அருகே கோனேரிராஜபுரத்தில் தர்மசாஸ்தா அய்யனார், பீடஹாரி அம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் கிராமத்தில் பூரண புஷ்கலாம்பிகை சமேத தர்மசாஸ்தா அய்யனார் மற்றும் பீடஹாரி அம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழாவானது கடந்த 3-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், தன பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்வான குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்று யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விமான கலசங்களை அடைந்தது. அதனைத் தொடர்ந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தி வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோனேரிராஜபுரம் கிராமமக்கள், நாட்டாண்மைகள், குலதெய்வக்காரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இரண்டு கோவில்களுக்கும் தமிழக அரசு சார்பில் தலா ரூ. 2 லட்சம் புனரமைப்பு பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.