தென்னை நார் உலர வைக்கும் பணி பாதிப்பு


தென்னை நார் உலர வைக்கும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 21 July 2023 1:15 AM IST (Updated: 21 July 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் பகுதியில் மழை பெய்து வருவதால், தென்னை நார் உலர வைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் பகுதியில் மழை பெய்து வருவதால், தென்னை நார் உலர வைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

தென்னை நார் உற்பத்தி

நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் தென்னை சார்ந்த தொழில்களும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தென்னை நார் உற்பத்தியில் 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன.

பச்சை தேங்காய் மட்டையில் இருந்து வெள்ளை நிற நாரும், காய்ந்த தேங்காய் மட்டையில் இருந்து கருப்பு நிற நாரும் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பெரும்பாலான கயிறு கேரளாவிற்கும், சீனாவிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நாரை வெயிலில் காயவைப்பது அவசியம். வெயிலில் நன்றாக உலர்ந்தால்தான் தரம் அதிகமாக இருக்கும்.

தொழிலாளர்களுக்கு வேலை இல்லை

இந்தநிலையில் நெகமம் பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இல்லையென்றால், மேகமூட்டமாக காலநிலை உள்ளது. இதனால் தென்னை நாரை உலர வைக்கும் பணி பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தொழிற்சாலைகளிலும் கயிறு உற்பத்தி மந்தமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறும்போது, பெரும்பாலான தென்னை நார் உலர் களங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அந்த மழைநீர் வடியும் நேரத்தில் மீண்டும் மழை பெய்து விடுகிறது. இல்லையென்றால், மேகமூட்டமான காலநிலையால் மழைநீர் வடிவது மிகுந்த காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தென்னை நாரை உலர வைக்கும் பணி பாதித்து உள்ளதோடு தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடிவது இல்லை என்றனர்.



Next Story