மாம்பழ விளைச்சல் பாதிப்பு
நெகமம் பகுதியில் புழு தாக்குதலால் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நெகமம்,
நெகமம் பகுதியில் புழு தாக்குதலால் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மாந்தோப்புகள்
முக்கனிகளில் முதன்மையாக திகழ்வது மாம்பழம். அதிக சத்துக்களை தன்னகத்தே கொண்ட மாம்பழம், செம்மண் பாங்கான நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இது இமாம்பசந்த், அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா, பெங்களூரா, நீலம் உள்பட பல்வேறு வகைகளில் உள்ளது. கோடைகாலத்தில் மாம்பழ சீசன் தொடங்குவது வழக்கம். அப்போது வணிக நிறுவனங்கள் முதல் சாலையோர தள்ளுவண்டி கடைகள் வரை அனைத்து இடங்களிலும் மாம்பழ விற்பனை களைகட்டும். நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மாந்தோப்புகள் உள்ளன. ஆனால் அங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதற்கு காரணம், காலநிலை மாற்றம் மற்றும் புழு தாக்குதல் என்று கூறப்படுகிறது.
நீர் மேலாண்மை
இதுகுறித்து நெகமம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
மாம்பழ வகைளில் முதன் முதலாக பூ பூத்து, காய்த்து, கனியாகி சந்தைக்கு வருவது செந்தூரா வகைதான். கடைசியில் பூ பூத்து, காய்த்து, கனியாகி சந்தைக்கு வருவது நீலா வகை. இது சந்தைக்கு வரும்போது மாம்பழ சீசன் முடிந்துவிடும்.
சுமார் 100 ஆண்டுகள் நீண்ட கால பயிராக நிலைத்து நின்று பலன் தரக்கூடிய மாமரம், ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் நடவு செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் வேண்டாத கிளைகளை வெட்டி பக்குவப்படுத்த வேண்டும். அத்துடன் 3 ஆண்டுக்கு பிறகு காய்க்கும் திறனுக்கு கொண்டு வந்து, மரத்தை சுற்றிலும் சூரிய ஒளி படும் வகையில் கிளைகளை வெட்டி கவாத்து செய்ய வேண்டும். அத்துடன் நீர் மேலாண்மை மற்றும் பராமரிப்பை முழுமையாக மேற்கொண்டால் கூடுதல் விளைச்சலை அடையலாம்.
லாபம் இல்லை
மாமர சாகுபடியில் பூ மற்றும் பிஞ்சு உதிர்தல், நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு புழு தாக்குதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் பூ பிஞ்சாக மாறி காயாக முற்றுவதற்குள் உதிர்ந்து விட்டது. இதனால் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மாமரங்களில் இருந்து லாபம் ஈட்ட முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக விவசாயிகளின் மொத்த உழைப்பும் வீணாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.