நூற்பாலைகளில் உற்பத்தி பாதிப்பு


நூற்பாலைகளில் உற்பத்தி பாதிப்பு
x

நூல் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை குறைந்ததால் நூற்பாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

கோவை, ஜூன்.14-

நூல் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை குறைந்ததால் நூற்பாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நூல் விலை குறை

பஞ்சு விலை ஒருபுறம் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையால் தற்போது விலை சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்த விலை குறைப்பு நூற்பாலை (ஸ்பின்னிங் மில்) நிர்வாகத்தினர் மத்தியில் சிறு ஆறுதல் அளித்துள்ள நிலையில், நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூல் விலை திடீரென ரூ.30 முதல் ரூ.40 வரை குறைந்துள்ளதால் நூற்பாலை நிர்வாகத்தினருக்கு புதிய நெருக்கடி சஏற்பட்டுள்ளது.

இதனால் பல மில்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது என தொழில் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

பஞ்சு இறக்குமதி

இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) கவுரவ செயலாளர் ஜெகதீஸ் கூறியதாவது:-

நாடு முழுவதும் 355 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை (எம்.சி.யு. 5 ரகம்) வரலாறு காணாத வகையில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்தது. தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பஞ்சு இறக்குமதி செய்ய அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தற்போது பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.5 ஆயிரம் வரை குறைந்துள்ளது.

ஆனால் மறுபுறம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை திடீரென குறைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள நூற்பாலை மில்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய நெருக்கடி

60 நெம்பர் கவுண்ட் நூல் விலை ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென ரூ.360-ஆக குறைந்துள்ளது. பஞ்சு மற்றும் நூல் விலை ஒரே மாதிரியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பஞ்சு விலை உயர்வு ஏற்படுத்திய நெருக்கடியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வரும் நூற்பாலை நிர்வாகத்தினருக்கு நூல் விலை குறைந்துள்ளது புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உற்பத்தி குறைப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு நூற்பாலைகளில் நஷ்டம் ஏற்படும் நிலையை எதிர்கொள்ள முடியாமல் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. நூற்பாலை நிர்வாகத்தினர் மீண்டும் மிகுந்த நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story