துணை தபால் நிலையத்தில் 3 மாதங்களாக சேவை பாதிப்பு
கணினி பழுது, இணையதள கோளாறு காரணமாக துணை தபால் நிலையத்தில் 3 மாதங்களாக சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் அவதி அடைந்து உள்ளனர்.
வால்பாறை
கணினி பழுது, இணையதள கோளாறு காரணமாக துணை தபால் நிலையத்தில் 3 மாதங்களாக சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் அவதி அடைந்து உள்ளனர்.
துணை தபால் நிலையம்
வால்பாறை நகரில் பொதுமக்களின் வசதிக்காக தலைமை தபால் நிலையம் உள்ளது. மேலும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் கிளை தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர சோலையாறு நகரில் துணை தபால் நிலையம் உள்ளது.
இந்த துணை தபால் நிலையத்தின் மூலம் எஸ்டேட் பகுதி மக்கள் சிறு சேமிப்பு, ஸ்பீடு போஸ்ட் அனுப்புதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து வரும் அசாம், ஜார்கண்ட், பீகார், மத்திய பிரதேசம் போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப அந்த துணை தபால் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சேவைகள் முடக்கம்
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக சோலையாறு நகரில் அமைந்துள்ள துணை தபால் நிலையத்தில் உள்ள கணினி உபகரணங்கள் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் தபால் சேவைகள் முடங்கி உள்ளது. பொதுமக்கள் தங்களின் தபால் சேவைகளை பூர்த்தி செய்ய சோலையாறு நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வால்பாறை தலைமை தபால் நிலையத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் சோலையாறு நகர் மட்டுமின்றி சேக்கல்முடி, மளுக்கப்பாறை, பன்னிமேடு, சேடல்டேம், உருளிக்கல் போன்ற பகுதியை பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சரி செய்ய வேண்டும்
இதுகுறித்து எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:-
வால்பாறை போன்ற மலைப்பிரதேசங்களில் தபால் சேவை இன்றியமையாததாக விளங்குகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தபால் சேவையைத்தான் நம்பி உள்ளனர். இதுபோன்ற நிலையில் தபால் நிலையத்தில் கணினி செயல்படாமல் இணையதள கோளாறால், சேைவ முடங்கி இருப்பது அவதிக்குள்ளாக்குகிறது.
கடந்த 3 மாதங்களாக அதை சரி செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் வால்பாறைக்கு சென்று வர வேண்டி உள்ளது. எனவே தபால் நிலைய உயர் அதிகாரிகள் சோலையாறு நகரில் உள்ள அலுவலகத்தில் ஆய்வு செய்து, கணினி உபகரணங்களை சரி செய்து, சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.