சித்தா டாக்டர்களுக்கு பதவி உயர்வு பலன்களை வழங்க புதிய செயல்திட்டத்தை நிறைவேற்றுங்கள் - சுகாதாரத்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சித்தா டாக்டர்களுக்கு பதவி உயர்வு பலன்களை வழங்கும் வகையில் புதிய செயல்திட்டத்தை 4 மாதத்தில் நிறைவேற்றுங்கள் என்று சுகாதாரத்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சித்தா டாக்டர்களுக்கு பதவி உயர்வு பலன்களை வழங்கும் வகையில் புதிய செயல்திட்டத்தை 4 மாதத்தில் நிறைவேற்றுங்கள் என்று சுகாதாரத்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பதவி உயர்வு கோரும் சித்தா டாக்டர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சித்தா டாக்டர் புகழேந்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக சுகாதார துறையின்கீழ் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள், கிராமப்புற சுகாதார நிலையங்கள், சித்தா மற்றும் ஓமியோபதி போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இவை அனைத்திலும் சித்தா டாக்டர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
அலோபதி, பல் டாக்டர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளை பின்பற்றித்தான் சித்தா டாக்டர்களையும் அரசு ஆஸ்பத்திரிகளில் தேர்ந்தெடுத்து பணியமர்த்துகின்றனர். ஆனால் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பலன்களை சித்தா டாக்டர்களுக்கு வழங்குவதில்லை.
மனுதாக்கல்
எனவே அரசாணையின்படி அலோபதி மற்றும் பல் டாக்டர்களை போல சித்தா டாக்டர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இவரைப்போல சிவகங்கை, மதுரை, கரூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் பல சித்தா டாக்டர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அலோபதி டாக்டர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது எளிதான பணி. ஆனால் சித்த மருத்துவ டாக்டர்கள் குறைந்த அளவில்தான் உள்ளனர். இவர்களுக்கு இந்த நடைமுறைகளை செயல்படுத்த இயலாது என்றார்.
புதிய செயல்திட்டம்
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர்கள் சித்த மருத்துவப்பிரிவு அரசு டாக்டர்கள்தான். இவர்களும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை அளிக்கின்றனர். அவர்களும் அனைத்து பலன்களையும் பெற தகுதியானவர்கள் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்துள்ளது. அந்த வகையில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கை குறித்து ஏற்கனவே மனு அளித்துள்ளனர்.
எனவே டாக்டர்கள் பதவி உயர்வு அரசாணை நேரடியாக மனுதாரர்களுக்கு பொருந்தாது என்றாலும், இவர்களும் பலன் அடையும் வகையில் உரிய செயல்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
அதனால் இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் பங்கேற்குமாறு மனுதாரர்களையும் அழைக்கலாம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் சித்த மருத்துவ டாக்டர்கள் பயன்பெறும் வகையில் உரிய செயல்திட்டத்தை 4 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.