குடிநீர் குழாய்கள் சீரமைப்பு உள்பட105 தீர்மானங்கள் நிறைவேற்றம்


குடிநீர் குழாய்கள் சீரமைப்பு உள்பட105 தீர்மானங்கள் நிறைவேற்றம்
x

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் குழாய்கள் சீரமைப்பு உள்பட 105 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரூர்

மாநகராட்சி கூட்டம்

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நேற்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாதாரண கூட்டத்தில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் பணிகளை சிறப்பிக்கவும் மற்றும் ஊக்குவிக்கவும் அவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கி ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது. மேலும் கரூர் மாநகராட்சி வார்டு எண்.4, ஜீவாநகர், சோளியம்மாள் கார்டன் மற்றும் காந்திநகர், தர்மகர்த்தா தெருக்களில் ரூ.7.10 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணி செய்வது.

தடுப்பு வைக்கும் பணி

கரூர் மாநகராட்சி மண்டலம் 2 பகுதிகளில் உள்ள பழைய ஆழ்குழாய் கிணற்றின் மின்மோட்டார், பேனல் போர்டு, பைப் லைன், பணிகள் மற்றும் வார்டு எண் 20 முதல் 27 வரை மற்றும் வார்டு எண் 29 முதல் 35 வரை உள்ள பகிர்மான குழாய் கசிவுகள் நெரூர் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் நீரேற்றம் செய்யப்பட்டு பாலம்மாள்புரம் உபநீருந்து நிலையம் வரை உள்ள ஏசி மெயின் லைன் உடைப்புகள் சரி செய்யும் பணிகளுக்கு ரூ.15 லட்சம் அனுமதிப்பது. கரூர் மாநகராட்சி முத்துகுமாரசாமி பஸ் நிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ள தென்புற கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் போது அதனை சுற்றி பாதுகாப்பு கருதி ரூ.4.15 லட்சத்தில் தடுப்பு வைக்கும் பணி செய்வது என்பன உள்பட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதிப்பூதியம்

தொடர்ந்து அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூ.15 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம் இந்த மாதம் (ஜூலை) முதல் வழங்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற கரூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயருக்கு ரூ.30 ஆயிரமும், துணை மேயருக்கு ரூ.15 ஆயிரமும், கவுன்சிலர்களுக்கு ரூ.10 ஆயிரமும் மதிப்பூதியம் வழங்கப்பட்டன. முன்னதாக கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் கூட்ட அரங்கில் இருந்து நிருபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story