பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்:பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தேனி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் ரமேஷ், திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சந்திரன் தீர்மானங்களை வாசித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணை வெளியிட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.