பெண்ணிடம் நகை பறித்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
எருமப்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேந்தமங்கலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சேந்தமங்கலம்
தங்க சங்கிலி பறிப்பு
எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு இவரது மனைவி வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் வந்து முகவரி கேட்பதுபோல் பேச்சு கொடுத்தார். அப்போது திடீரென்று அவரை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.
பின்னர் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பி சென்றனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் சரவணன் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் திருச்சி நகரப் பகுதியில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
2 பேருக்கு சிறை
விசாரணையில், நாகர்கோவிலை சேர்ந்த டார்வின்சன் (வயது 39), திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த மஞ்சு என்கிற மகேஸ்வரன் (38) ஆகிய 2 பேரும், சரவணன் மனைவியிடம் தங்க சங்கிலியை பறித்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் 2 பேர் மீது சேந்தமங்கலம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பு கூறினார். அதில் டார்வின்சன் மற்றும் மகேஸ்வரனுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.