தனித்திறனை மேம்படுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும்


தனித்திறனை மேம்படுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும்
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:46 PM GMT)

கல்வி பயில்வதோடு தனித்திறனை மேம்படுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

கலைப்போட்டிகள்

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கலைப்போட்டிகளான கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி நடைபெற்றன. இப்போட்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அடிப்படை கல்வி சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கத்திலும், மாணவர்கள் பசியின்றி கல்வி பயில வேண்டும் என்ற நோக்கிலும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு

பள்ளி மாணவ- மாணவிகள் அனைவரும் பாடங்களை மனப்பாடம் செய்து படிப்பதை விட்டு புரிந்துபடித்திட வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகளில் பங்கேற்று தங்களுடைய மொழித்திறன் மற்றும் தனித்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். படிப்பு மட்டுமின்றி வெளிஉலகத்தையும் அறிந்துகொள்ள வேண்டும்.

சந்திரயான்-3 திட்ட இயக்குனரான விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் அரசு பள்ளியில் படித்து இன்று உலகமே திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். ஆகவே படிக்கின்ற காலகட்டத்திலேயே நம் நாட்டின் வரலாறு தொடர்பான தகவல்கள், அறிவியல் சம்பந்தமான தகவல்கள், தினசரி நாளிதழ்கள் போன்றவற்றை நாள்தோறும் கட்டாயம் படிக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் பள்ளி- கல்லூரி படிப்பை முடித்தவுடன் அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்பை பெற முடியும்.

தனித்திறனை மேம்படுத்த

தமிழகத்திற்கு இருமொழி கொள்கையே போதும். ஆனால் மத்திய அரசு 3-வதாக ஒரு மொழியை கற்க கூறுகிறது. சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம்கூட கிடையாது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அரசானது, பள்ளி- கல்லூரி மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதோடு அவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் பல்வேறு கலை மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வி பயில்வதோடு தங்களுடைய தனித்திறனை மேம்படுத்திக்கொண்டு உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பரிசு, சான்றிதழ்

தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட கலெக்டர் சி.பழனி, எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகரமன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ், நகரமன்ற துணை தலைவர் சித்திக் அலி, மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், தலைமையாசிரியர் சசிகலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story