மீன்பிடி இறங்கு தளத்தை மேம்படுத்துவது அவசியம்


மீன்பிடி இறங்கு தளத்தை மேம்படுத்துவது அவசியம்
x
தினத்தந்தி 30 July 2023 6:45 PM GMT (Updated: 30 July 2023 6:47 PM GMT)

பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தை மேம்படுத்துவது அவசியம்

கடலூர்

பரங்கிப்பேட்டை

மீனவர்கள் கருத்து

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களான சின்னூர், இந்திராநகர், புதுப்பேட்டை, புதுக் குப்பம், வேளங்கிராயன்பேட்டை, சாமியார்பேட்டை, குமாரப்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பேட்டோடை, பரங்கிப்பேட்டை, பெரியக்குப்பம், முடசல்ஓடை, எம்.ஜி.ஆர். திட்டு, முழுக்குத்துறை, சின்னவாய்க்கால் உள்பட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக பைபர், விசைப்படகுகள் மூலம் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

படகு மூலம் பிடித்து வரும் மீன்களை தரையில் போட்டு சுகாதாரமற்ற முறையில் வைத்து விற்பனை செய்து வந்தனர். ஏலம் எடுப்பவர்களும் இங்கிருந்து மீன்களை சற்று தொலைவில் எடுத்து சென்று பேக்கிங் செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர். நாள் ஒன்றுக்கு சுமார் 20 டன் மீன்களை கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

மீன்பிடி இறங்கு தளம்

ஆனால் இங்குள்ள மீனவர்களுக்கும், அவர்களை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. கழிவறை, குடிநீர், தரைதளம், பனிக்கட்டி அறை, மீன்பிடி வலைகள் பாதுகாப்பு வசதி போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் தங்களுக்கு மீன்பிடி இறங்கு தளம், ஏற்றும் தளம் மற்றும் ஏலம் விடும் கூடம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, மீன் இறங்கு தளம், ஏற்றுதளம் மற்றும் ஏலம் விடும் கூடம் அமைப்பதற் காக உலக வங்கி உதவியுடன் அவசரகால சுனாமி புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.13½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில் இருந்து கடந்த 2011 -ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தது.

பல்வேறு வசதிகள்

இதன்படி வெள்ளாறு முகத்துவாரம் ஆழப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை ஏலம் விட அன்னங்கோவில் பகுதியில் 3 கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கழிவறை வசதி, மீன்விற்பனை செய்ய 3 கட்டிடங்களில் 120 அறைகள், மீனவர்களின் வலைகளை காய வைக்கவும், பின்னுவதற்கும் 2 கட்டிடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், நிர்வாக அலுவலகம், மீன் பதப்படுத்தும் ஐஸ் பிளாண்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய மீன்பிடி இறங்கு தளம் கட்டி கடந்த 2014-ம் ஆண்டு திறந்து பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

இதன் மூலம் அப்பகுதி மீனவர்கள் இந்த மீன்பிடி இறங்கு தளத்தை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் நாளடைவில் போதிய பராமரிப்பின்றி ஒவ்வொரு கட்டிடங்களும் சேதமடைய தொடங்கியது. படகுகள் நிறுத்தும் ஜிட்டியும் உடைந்து காணப்படுகிறது. மீன்கள் ஏலம் விடும் தளத்தில் வாய்க்கால் உடைந்து ஆங்காங்கே கழிவுநீர் ஓடுகிறது. வலைகளை காய வைக்கும் அறைகளிலும் போதிய வசதியின்றி வெளியில் போட்டு வைத்துள்ளனர். மின்மோட்டார் பழுதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல், அவை தற்போது காட்சி பொருளாக நிற்கிறது. மீனவர்களுக்காக வழங்கப்பட்ட அறைகளும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் தற்போது மீண்டும் பழைய நிலையிலேயே மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. இதை மேம்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி அப்பகுதி மீனவர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

குடிநீர் தொட்டி

சின்னூர் மீனவர் சிவக்குமார் கூறுகையில், நாங்கள் பல ஆண்டு காலம் கோரிக்கை வைத்த பிறகு தான், அன்னங்கோவிலில் மீன்பிடி இறங்கு தளம், ஏற்று தளம், ஏலம் விடும் தளத்தை அரசு அமைத்து கொடுத்தது. ஆனால் அதன்பிறகு எவ்வித பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. இதனால் வடிகால் வாய்க்கால் உடைந்து கழிவுநீர் ஓடுகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தும் பயன் இல்லை. உயர்மின் கோபுர விளக்கு இருந்தும் எரியவில்லை. தரைதளம் உடைந்து பள்ளமும், மேடாகவும் காட்சி அளித்து வருகிறது. இதனால் மீனவர்கள் கொண்டு வரும் மீன்களை ஏலம் விட்டு கனரக வாகனங்களில் ஏற்றுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே எங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மீன்வளத்துறை அதிகாரிகள் செய்து தர வேண்டும் என்றார்.

நிரந்தர தீர்வு

முடசல்ஓடை மீனவர் தமிழரசன் கூறுகையில், மீன்பிடி இறங்கு தளம் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. கழிவறை வசதி இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் மீனவர்கள், தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். படகுகள் நிறுத்தும் ஜிட்டி உடைந்து இருப்பதால், படகுகளை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த முடியவில்லை. இது பற்றி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் பலன் இல்லை. மீன்பிடி வலைகளை பாதுகாக்கவும் போதிய வசதிகள் இல்லை. இதனால் திறந்த வெளியில் கிடந்து வீணாகும் நிலை உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை வைத்து பெற்ற மீன்பிடி இறங்குதளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தற்போது எங்களிடம் இல்லை. 2011-ம் ஆண்டுக்கு முன்பு நாங்கள் எப்படி இருந்தோமோ, அதே நிலையில் தான் நாங்கள் தற்போது உள்ளோம். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் எங்களுக்கு அனைத்து வசதிகளையும் மீண்டும் முறையாக அமைத்து கொடுக்க வேண்டும் என்றார்.


Next Story