வேளாண் தொழிலை மேம்படுத்தும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
வேளாண் தொழிலை மேம்படுத்தும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.
காரைக்குடி,
வேளாண் தொழிலை மேம்படுத்தும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.
நவீன சேமிப்பு தளங்கள்
காரைக்குடி, மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஆகிய வட்டங்களில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் சார்பில் ரூ.23.74 கோடி மதிப்பீட்டில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து காரைக்குடி வட்டம், பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் சார்ந்த பல்வேறுத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காத்து வருகிறார். மேலும், நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடும் வகையில், பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது.
இயற்கை விவசாயம்
மேலும், இயற்கை விவசாயம் மூலம் அதிக லாபம் பெறும் பாரம்பரிய நெல் சாகுபடி முறையினை விவசாயிகள் கையாண்டு, அதன் மூலம் லாபம் பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல் சாகுபடியினை முறையாக சேமித்து பயன்பெறும் வகையில், தமிழக அரசால் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், மேற்கூரையுடன் கூடிய நவீன சேமிப்புத்தளங்கள் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், புதிய வட்ட செயல்முறை கிடங்குகள் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத்தளங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், உதவி செயற்பொறியாளர் பூமிநாதன், தாசில்தார் தங்கமணி, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆனந்த், பேரூராட்சி தலைவர்கள் சாந்தி, சோலைகார்த்திக், ராதிகா, சங்கீதா முகமுது மீரா, தி சூரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.