மஸ்தான் கொலை: கத்தியின்றி ரத்தமின்றி சத்தமில்லாமல் கொலை செய்வது எப்படி? வீடியோக்களை தேடி தேடி பார்த்த முக்கிய குற்றவாளி
மஸ்தானை கொலை செய்ய திட்டம் போட்டது முதல் தீர்த்துக் கட்டியது வரை இம்ரான் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த 22-ந்தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் டிரைவராக வேலை செய்து வந்தார். அவர் அழைத்துச் சென்ற போதுதான் மஸ்தான் உயிரிழந்திருந்தார்.
காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மஸ்தானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்ற போதுதான் உயிரிழந்தது தெரியவந்தது என்றும் இம்ரான் கூறி இருந்தார்.
இது தொடர்பான உரிய விசாரணை நடத்த தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து தாம்பரம் துணை கமிஷனர் சி.பி.சக்கரவர்த்தி, உதவி கமிஷனர் ஜெயராஜ் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
இம்ரான்பாஷா மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர். மஸ்தானுடன் அவருக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினை ஏதும் இருந்ததா? என்பது பற்றி விசாரித்தனர். அப்போது மஸ்தானிடமிருந்து இம்ரான் கொஞ்சம் கொஞ்சமாக லட்சக்கணக்கில் கடன் வாங்கி இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இம்ரான் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது. அவரை பிடித்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தினர். இதில் ரூ.15 லட்சம் கடனை மஸ்தான் திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் இம்ரான் கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டம் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இம்ரான், சுல்தான், நஷீர், தவ்பிக் அகமது, லோகேஸ்வரன் ஆகிய 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இம்ரானிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கத்தியின்றி, ரத்தமின்றி மஸ்தானை திட்டம் போட்டு கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதற்காக இம்ரான் சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை தேடி தேடி பார்த்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது. சத்தமில்லாமல் ஒருவரை கொலை செய்வது எப்படி?
என்பது பற்றிய தகவல்களை யூடியூப் வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டதாக இம்ரான் கூறிய தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
மஸ்தானை கொலை செய்ய திட்டம் போட்டது முதல் தீர்த்துக் கட்டியது வரை இம்ரான் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.அதன் விவரம் வருமாறு:- டாக்டர் மஸ்தான் அரசியல் செல்வாக்குடன் மருத்துவமனையும் வைத்து நடத்தி வந்தார்.
இதனால் அவரிடம் டிரைவராக வேலைக்கு சேர்ந்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன். நான் நினைத்தபடியே டாக்டர் மஸ்தானும், கேட்கும் போதெல்லாம் பண உதவி செய்தார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவர் கொடுத்த பணம் ரூ.15 லட்சம் அளவுக்கு சேர்ந்து விட்டது.
இந்த பணத்தை கேட்டு மஸ்தான் என்னிடம் தொந்தரவு செய்தார். ஆனால் என்னால் பணத்தை கொடுக்க இயலவில்லை. பணம் வரும்போது மெதுவாக தருகிறேன் என்று கூறியும் மஸ்தான் கேட்கவில்லை. கொடுத்த கடனை என்னிடம் இருந்து எப்படியாவது வசூலித்து விட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் கடனை கேட்டு தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.
மஸ்தானை கொலை செய்தால்தான் கடன் பிரச்சினை தீரும் என்று எண்ணி அவரை கொல்வதற்கு திட்டம் போட்டேன். இதற்காக எனது சித்தி மகன் சுல்தான் அகமதுவிடம் உதவி கேட்டேன். அவன் தனது நண்பர்களை அழைத்து வருவதாக கூறினான்.
சுல்தான் அகமதுவிடம் மஸ்தானை ஏமாற்றி காரில் அழைத்து வருகிறேன். நீங்கள் சத்தமே இல்லாமல் கொலை செய்து முடிக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவனும் ஒப்புக்கொண்டான். இதன்படிதான் மஸ்தானை அழைத்துச் சென்ற போது சுல்தான், நஷீர் ஆகியோர் நாங்கள் சென்ற காரில் பின்னால் அமர்ந்தனர்.
எங்கள் காருக்கு பின்னால் தவ்பீக் அகமது, லோகேஸ்வரன் இருவரும் இன்னொரு காரில் வந்தனர். பரனூர் சுங்கச்சாவடி பகுதி அருகே கார் சென்ற போது, சாலையோரமாக காரை நிறுத்தினோம்.
அப்போது நஷீர், மஸ்தானின் 2 கைகளையும் பின்புறமாக இருந்து நன்றாக பிடித்துக் கொண்டான். சுல்தான் அவரது வாய் மற்றும் மூக்கை பிடித்து பொத்தி மூச்சுத் திணறலை ஏற்படுத்தி கொலை செய்தான். பின்னர் இருவரும் காரில் இருந்து இறங்கி பின்னால் வந்த காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். நான் மாரடைப்பால் மஸ்தான் இறந்து போனதாக நாடகம் ஆடினேன்.
இவ்வாறு இம்ரான் வாக்குமூலம் அளித்துள்ளான். கொலை செய்து முடித்த பின்னர் இம்ரான் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனையின் போது பரிசோதனை அறிக்கையை மாற்றி எழுத ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் கொலை என தெரிந்து விட்டால் மாட்டிக்கொள்வோமே என்கிற பயத்தில் முக்கிய குற்றவாளியான இம்ரான் லஞ்சம் கொடுக்க முயன்ற திடுக்கிடும் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் மிகவும் சாதுர்யமாக மஸ்தான் கொலைக்கு இம்ரான் மூளையாக செயல்பட்டுள்ளார். ஆனால் போலீசார் தாங்கள் அதைவிட சாமார்த்தியசாலி என்பதை நிரூபித்து காட்டி உள்ளனர்.