குமரியில் 2 ஆண்டுகளில் ரூ.1,270 கோடியில் கட்டுமான பணி அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு


குமரியில் 2 ஆண்டுகளில் ரூ.1,270 கோடியில் கட்டுமான பணி அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
x

குமரியில் 2 ஆண்டுகளில் ரூ.1,270 கோடியில் கட்டுமான பணிகள் நடப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

குமரியில் 2 ஆண்டுகளில் ரூ.1,270 கோடியில் கட்டுமான பணிகள் நடப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

பொதுக்கூட்டம்

குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திங்கள்சந்தையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சந்திரா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் வரவேற்று ேபசினார். ஒன்றிய நிர்வாகிகள் ரமணிரோஸ், முருகன், விஜயன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும்போது கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. கடந்த ஆட்சியில் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை யாரும் மறக்க முடியாது.

கல்வி உதவித்தொகை

மத்தியில் ஆளுகின்ற பா.ஜனதாவினர் மக்களை மதிக்கவில்லை. மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்தார்கள். அவர்களை கர்நாடகத்தில் மக்கள் வெறுத்து ஒதுக்கி இருக்கிறார்கள்.

இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கி கொடுப்போம் என்று கூறினார்கள். 9 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை மத்திய அரசு கல்வி உதவி தொகை வழங்கவில்லை. ஆனால் தமிழக அரசு புதுமைப்பெண் திட்டம் மூலமாக உயர்கல்வி படிக்கும் ஏழை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குகிறது. இதனால் இன்று தமிழ்நாட்டில் உயர் கல்வி படிக்கும் பெண்களின் சதவீதம் 72 ஆக உயர்ந்துள்ளது.

மண்டைக்காடு கோவில்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணி செய்ய ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

குமரியில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1,270 கோடியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தலைமை கழக சிறப்பு பேச்சாளர் குமரி பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் எப்.எம். ராஜரெத்தினம், கழக பேச்சாளர் சவுந்தர்ராஜ் உள்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர்கள் சுஜெய் ஜாக்சன், சகாய கிறிஸ்துதாஸ், நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சசி சுபாசிங் நன்றி கூறினார். முன்னதாக ராஜேந்திரனின் இசை கச்சேரி நடந்தது.


Next Story