நால்ரோட்டில் விபத்துகளை தடுக்க ரவுண்டானா அமைக்கப்படுமா?
குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நான்கு வழி சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்குளி
குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நான்கு வழி சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நால்ரோடு
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவிற்குட்பட்ட குன்னத்தூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதியாக நால்ரோடு அமைந்துள்ளது. இங்கிருந்து கோபி, பெருந்துறை, திருப்பூர் மற்றும் செங்கப்பள்ளி வழியாக கோவை தேசிய நெடுஞ்சாலை செல்வதற்கு தினமும் அதிகமான வாகனங்கள் இவ்வழியே செல்கின்றன.
முக்கியமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி பஸ்கள், கல்லூரி பஸ்கள், பனியன் நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகன போக்குவரத்து என ஆயிரக்கணக்கான வாகனங்கள் நால்ரோடு பகுதியை கடந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
அவ்வப்போது சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் இது குறித்து பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் இடம் குன்னத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும். அந்த நிலத்தில் ஊத்துக்குளி சாலையொட்டி மேற்புறம் 4 மீட்டர் அகலத்திலும் கோவிலில் வடபுறம் பெருமாநல்லூர் சாலையையொட்டி 4 மீட்டர் அகலத்திலும் சாலையை விரிவாக்கம் செய்யவும் மற்றும் ரவுண்டானா அமைப்பதற்கு ஏதுவாக நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் ரவுண்டானா அமைக்க உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.