மக்கள் நீதிமன்றத்தில் 89 வழக்குகளில் ரூ.2½ கோடிக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 89 வழக்குகளில் ரூ.2½ கோடிக்கு தீர்வு
x

ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 89 வழக்குகளில் ரூ.2½ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

ராணிப்பேட்டை

மக்கள் நீதிமன்றம்

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நீதிபதிகள் ஜான் சுந்தர்லால் சுரேஷ், ஜெயசூர்யா மற்றும் நவீன்துரைபாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

வாலாஜா தாலுகா வள்ளுவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27), கட்டுமான தொழிலாளியாக பணியாற்றினார். இவருக்கு பிரேமலதா (24) என்ற மனைவியும், கனிஷ்கா (2) மற்றும் கார்த்திகேயன் (1) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியன்று இருசக்கர வாகனத்தில் வள்ளுவம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில் பலத்த காயமடைந்த சுபாஷ் பரிதாபமாக உரியிழந்தார்.

சுபாஷின் உறவினர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் II-ல் இழப்பீட்டு கேட்டு தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வழக்கறிஞர்கள் அண்ணாதுரை, ஜானகிராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், யுனைெடட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.22 லட்சத்து 50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டு, அதற்கான ஆணையை வழங்கினர்.

மேலும் நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, மற்றும் வங்கி வழக்குகள் உள்பட மொத்தம் 77 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சத்து 86 ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது.

அரக்கோணம்

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரக்கோணம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.அருந்ததி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ஷாக்கிரா பானு, வழக்கறிஞர் கே.வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதில் 12 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.34 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. வங்கியில் கடன் பெற்றவர்கள் சமரசத்தின் மூலம் கடன் தொகை திருப்பி செலுத்துவதில் சலுகை பெற்றும் பயன் அடைந்தனர். மேலும் பல ஆண்டுகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த ஒரு தம்பதி சமரசத்தின் மூலம் சேர்த்து வைக்கப்பட்டனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் வழக்குகளை சமரசமாக முடித்துக் கொண்டனர்.

இரண்டு இடங்களிலும் நடந்த மக்கள் நீதி மன்றத்தில் 89 வழக்குகளில் ரூ.2½ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.


Next Story