கூடுதலாக பணித்தள பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்


கூடுதலாக பணித்தள பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்
x

கூடுதலாக பணித்தள பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்

மயிலாடுதுறை

கொள்ளிடம்

கோபாலசமுத்திரம் ஊராட்சியில் கூடுதலாக பணித்தள பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

ஒன்றியக்குழு கூட்டம்

கொள்ளிடம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் பானுசேகர், ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் வரவேற்றார். இதில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-

அங்குதன் (தி.மு.க.):வேட்டங்குடி ஊராட்சியில் பள்ளிக்கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் தங்கி படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

லட்சுமி பாலமுருகன்(தி.மு.க.): நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும். கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் அருகில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

ரீகன் (அ.தி.மு.க.): பழைய பாளையம் உப்பண்ணாற்றின் அருகில் ஆபத்தான சாலை வளைவில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். அரசூர் ஊராட்சி நிர்வாகம் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

செந்தாமரைக்கண்ணன் (தி.மு.க.): பாலூரன் படுகை கிராமத்தில் ஈம சடங்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாலினி பூவரசன் (தி.மு.க.): திருமுல்லைவாசல் ஊராட்சியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

பெயர் பலகை

மஞ்சிராதேவிரமேஷ் (தி.மு.க.): ராதாநல்லூர் கிராமங்களில் குடிநீர் வசதி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு அரசு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவபாலன் (பா.ம.க.): கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் பெயர் பலகை வைக்க வேண்டும்.

பானு சேகர் (காங்கிரஸ்): கோபாலசமுத்திரம் ஊராட்சியில் கூடுதலாக பணித்தள பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.

ஒன்றியக்குழு தலைவர்: கொள்ளிடம் ஒன்றியத்தில் மின்கம்பங்கள் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அவற்றை மின்சாரத்துறை சார்பில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கூத்தியம் பேட்டை கிராமத்தில் வீடு இல்லாத பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் தொடர்பாக தாண்டவன்குளம், புதுப்பட்டினம், கோபாலசமுத்திரம், ஆணைக்கரை சத்திரம், திருமுல்லைவாசல், ஆகிய ஊராட்சிகளில் புதிய பணித்தள பொறுப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர்.


Next Story