ஆனைமலை தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?-சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
ஆனைமலை தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்பில் உள்ளார்கள்.
ஆனைமலை
ஆனைமலை தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்பில் உள்ளார்கள்.
மீட்பு பணிகள் தாமதம்
ஆனைமலை தாலுகாவில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கு, 23 ஆயிரம் ஹெக்டர்க்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் தென்னை மரத்திலிருந்து மதிப்பு கூட்டும் பொருளாக மட்டை சீமார், தென்னை நார், பித் பிளாக் கட்டிகள் தயாரிக்கும்,65-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட நுால் மில்கள் உள்ளன. ஆனைமலையில் உள்ள பெரும்பாலான தொழிற் சாலைகளில், தீ விபத்து ஏற்படுகிறது. விவசாய நிலங்களிலுள்ள கிணறுகளில், கால்நடைகள் தவறி விழுகிறது. அதேபோல், ஆழியாறு ஆற்றில் குளிக்கும் சுற்றுலாப்பயணிகள் பலரும் நீரில் மூழ்குகின்றனர். ஆனைமலையில் தீயணைப்புத்துறை அலுவலகம் இல்லாததால், தீ விபத்து உள்ளிட்ட அவசர நேரங்களில், பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்புத்துறையினர் வருகின்றனர்.
இதனால், தீ விபத்து ஏற்படும் போது சேதம் அதிகரிப்பதுடன், தொழிற்சாலைகள், வீடுகளில் தீயில் சிக்குவோர் மீட்கப்படுவது தாமதமாகிறது.
தீயணைப்பு நிலையம் வேண்டும்
அதேபோல் நீர்நிலைகளில் சிக்குபவர்களையும், இறந்தவர்களின் உடலை மீட்கவும், விபத்து காலங்களிலும் சிக்கல் ஏற்படுகிறது. இந்த பிரச்சி னைகளுக்கு தீர்வு காண, ஆனைமலைக்கு தனியாக தீயணைப்புத்துறை அலுவலகம் கட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- ஆனைமலையை தனி தாலுகாவாக அறிவித்து 3½ ஆண்டுகள் கடந்தும் எந்த அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யாமல் உள்ளன. குறிப்பாக தீயணைப்பு நிலையம் இல்லை. இதனால் அவசர காலங்களிலும் பேரிடர் காலங்களில் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் கடந்த 4 மாதங்களில் மட்டும் 4 முறை தென்னை நார் தொழிச்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை அணைக்க பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. இதனால் அதிகளவு பொருட்கள் தீயில் கருகி சேதமடைகிறது. எனவே இதனை தவிர்க்க ஆனைமலையில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.