ஆனைமலையில் பழுதான பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கீடு-ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
ஆனைமலையில் பழுதான பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனைமலை
ஆனைமலையில் பழுதான பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் சாந்தி கார்த்திக் மற்றும் துணைத்தலைவர் கோபால் ரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியம் மற்றும் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த பள்ளிக்கட்டிடம், சமையலறை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றை சீரமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பிரச்சினைக்கு தீர்வு
பின்னர் கவுன்சிலர்கள் கூறியதாவது:- தென்சித்தூர் பகுதியில் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் கிராமப்புறங்களில் சாலைகளை இருபுறங்களிலும் புதர்கள் ஆக்கிரமித்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது தவிர விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதையடுத்து 15-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து ஒன்றியத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.