பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் ஆண்டிபாளையம் முல்லை நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீரபாண்டி
திருப்பூர் ஆண்டிபாளையம் முல்லை நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
திருப்பூர் மாநகராட்சி 59-வது வார்டு முல்லை நகர், தனலட்சுமி நகர், கே.எஸ்.என். நகர் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் சாலையின் நடுவே தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் நேற்று காலை திடீரென்று ஆண்டிபாளையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ட்ரல் போலீசார், 4-ம் மண்டல உதவி ஆணையர் வினோத் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியதாவது:-
தனலட்சுமி நகர் மற்றும் கே.என்.எஸ்.நகர் பகுதி கழிவு நீர் நேரடியாக முல்லை நகர் பகுதிக்கு வந்து அதற்கு மேல் கழிவு நீர் செல்ல வழி இல்லாததால் அங்கு குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவி குழந்தைகள் முதல் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மிக விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்றும் இனி தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் கழிவு நீர்களை வாகனம் மூலமாக அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்றும் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.