பவானியில் காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் 2 பேர் கைது
காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா்
பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புரோக்கர்கள் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடந்து வருவதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை பவானி புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வலையக்காரபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் என்பவரின் மகன் சக்திவேல் (வயது 30) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர் பவானி காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ராம்குமாருக்கு (47) விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராம்குமாரையும், சக்திவேலையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.