புதூரில் தலித் விடுதலை இயக்கத்தினர் போராட்டம் வாபஸ்


புதூரில் தலித் விடுதலை இயக்கத்தினர் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 4:29 PM IST)
t-max-icont-min-icon

புதூரில் தலித் விடுதலை இயக்கத்தினர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேரூராட்சி 9-வது வார்டு டாக்டர் அம்பேத்கர் தெருவில் தனிநபர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் பொதுப்பயன்பாட்டுக்கான இடத்தை மீட்டெடுக்க வேண்டும். புதூர் பேரூராட்சியில் உள்ள ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு உடனடியாக பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும். மயானத்தில் கொட்டப்பட்டுள்ள பேரூராட்சி கழிவுகளை அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. மண்டல துணை தாசில்தார் சுபா தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம், புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) கணேசன் மற்றும் தலித் விடுதலை இயக்க இளைஞரணி செயலாளர் பீமாராவ், புதூரைச் சேர்ந்த மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புதூர் பேரூராட்சி 9-வது வார்டு டாக்டர் அம்பேத்கர் தெருவில் தனிநபர்களின் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஒருவார காலத்துக்குள் நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் சம்மந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதூர் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு அருகே உள்ள ஊருணி அல்லது கண்மாயிலிருந்து சரள் மண் எடுத்து பாதை வசதி ஏற்படுத்தி தரப்படும். மயானத்தில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை 10 நாட்களில் சமப்படுத்தி சுத்தம் செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து தலித் விடுதலை இயக்கத்தினர் போராட்டத்தை கைவிட்டதாக தெரிவித்தனர்.


Next Story