சென்னையில், உலக புத்தக கண்காட்சி-அமைச்சர் கே.என். நேரு தகவல்


சென்னையில், உலக புத்தக கண்காட்சி-அமைச்சர் கே.என். நேரு தகவல்
x

சென்னையில் உலக புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சேலம்

புத்தக கண்காட்சி

சேலம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்காக சென்று புத்தகங்களை பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்த போது எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் அவரை சந்தித்து சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று சென்னையில் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கி அதற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார். மேலும் ரூ.100 கோடி மதிப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கருணாநிதி உருவாக்கினார்.

சால்வை, பூங்கொத்து

அதே போன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் விழாக்களில் சால்வை, பூங்கொத்துக்கு பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி, அவ்வாறு பெறப்படும் புத்தகங்களை கிராமங்களில் உள்ள நூலகங்களுக்கு வழங்கினார்.

இந்த கண்காட்சி சேலம் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் திறமையை வெளி உலகத்திற்கு கொண்டு வரும் இடமாக அமைந்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சி காலை 10 முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. விழாவில் எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், உதவி கலெக்டர் (பயிற்சி) வாகி சங்கீத் பல்வந்த், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலாளர் முருகன், மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story