கிறிஸ்தவ ஆலய பணியாளர்கள் நலவாரியத்தில்உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்


கிறிஸ்தவ ஆலய பணியாளர்கள் நலவாரியத்தில்உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்

விழுப்புரம்


விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நலவாரியம்

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்புசாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்களான கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம், திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.5 ஆயிரமும், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரமும், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500-ம், முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story