கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்


கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 11 March 2023 12:30 AM IST (Updated: 11 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேவாலய பணியாளர்கள்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியர்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நல வாரியம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த நலவாரியத்தில் பதிவு பெறுவதற்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

அடையாள அட்டை

இந்த திருச்சபைகளின் பரிந்துரை அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் நலவாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

அதாவது 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை கல்வி உதவித் தொகையும், விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் உதவித்தொகையும், விபத்தால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உதவித்தொகையும், இயற்கை மரணமாக இருந்தால் ரூ.20 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும்.

முதியோர் ஓய்வூதியம்

மேலும் ஈமச்சடங்குக்கு ரூ.5 ஆயிரம், திருமண உதவித்தொகையாக ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம், கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 வழங்கப்படும்.

எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Related Tags :
Next Story