கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் தவணையை செலுத்த காலஅவகாசம் வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை


கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் தவணையை செலுத்த காலஅவகாசம் வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
x

கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் தவணையை செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திருநெல்வேலி

கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் தவணையை செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கை குறித்து எடுத்துரைத்தனர்.

விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் பேசும் போது, பயிர்காப்பீட்டு திட்டத்தை அரசே நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் தலையீடு இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்காப்பீடு வழங்க வேண்டும். களக்காட்டில் வாழை விற்பனை நிலையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மானூர் கால்வாயை தூர்வாரி விரைவில் பாலம் அமைக்க வேண்டும். வண்டல்மண் எடுக்க 10 நாட்கள் அனுமதி வழங்க வேண்டும். காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும். வெள்ளாங்குழி 3-வது குளத்தை ஆய்வு செய்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய கடனுக்கான தவணையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் பதில்

அதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசுகையில், "காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். களக்காட்டில் வாழை விற்பனை நிலையத்தில் விரைவில் ஏலம் தொடங்கும். காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க அங்கு சோலார் மின்வேலி அமைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் இது தொடர்பாக அடுத்த மாதம் (செப்டம்பர்) விவசாயிகள், வனத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் கடன் செலுத்த கூடுதல் அவகாசம் தேவை என்ற விவசாயிகள் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என்று கூறினர்.

விவசாயிகளுக்கு சான்றிதழ்

தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் பேசுகையில், "நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்டு மாதத்தில் 1.60 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது வளமையான மழையளவைவிட 93.13 சதவீதம் குறைவாகும். இதனால் ஏற்பட்டுள்ள பயிர்சாகுபடி குறைவு குறித்த விரிவான விவரம் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை அதிகஅளவில் சாகுபடி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது'' என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் மானியத்துடன் இடுபொருட்களையும், தோட்டக்கலைத்தறை சார்பில் ஒருவருக்கு சிப்பம் அறை கட்டுவதற்கான ரூ.4 லட்சத்திற்கு காசோலையும் வழங்கப்பட்டது.


Next Story