கோவையில் தம்பதி உள்பட 3 பேருக்கு கொரோனா


கோவையில் தம்பதி உள்பட 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீனா, ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கோவை வந்த தம்பதி உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதியானது.

கோயம்புத்தூர்

கோவை

சீனா, ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கோவை வந்த தம்பதி உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதியானது.

புதியவகை தொற்று

சீனா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பிஎப் 7 என்ற புதிய வகை கொரோனா தொற்று காரணமாக தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் அது கோரமுகத்தை காட்டி பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி விமானநிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

இதன்படி கோவை விமானநிலையத்திலும் பயணிகளை கண்காணிக்கவும், ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்வதற்காகவும் சிறப்பு மருத்துவ மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி ஷார்ஜாவில் இருந்து ஒரு விமானம் கோவை விமானநிலையம் வந்தது. அதில் வந்து இறங்கிய பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

3 பேருக்கு கொரோனா

விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டவர்களின் பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அதில் கோவை பீளமேட்டில் வசித்து வரும் 27 வயது இளம் பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஆனால் அவருக்கு காய்ச்சல், சளி இருமல் என எவ்வித கொரோனா அறிகுறிகளும் இல்லை. இருந்தபோதிலும் அவருக்கு எடுத்த பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானதால் அவர் வீட்டின் அறையிலேயே தனிமைப்படுத்தி மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்ததால் அவருக்கு எந்தவகையான கொரோனா என்பதை கண்டறிய சளி மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கணவன், மனைவி கடந்த வாரம் சீனாவில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் வழியாக கோவை வந்து இறங்கினர். சீனாவில் இருந்து கோவை வந்ததால் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே அவர்களுக்கு காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளனர். இவர்களுக்கும் எந்த வகை கொரோனா என்பதை கண்டறிய சளிமாதிரி சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவற்றின் முடிவு இதுவரை வரவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story