குன்னூரில் மதுபோதையில் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திய நகராட்சி டிரைவர் பணியிடை நீக்கம்
குன்னூரில் மதுபோதை யில் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திய நகராட்சி டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குன்னூர்
குன்னூரில் மதுபோதை யில் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திய நகராட்சி டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நடுரோட்டில் நின்ற வாகனம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் சரவண குமார் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி நேரத்தின் போது சாலையின் நடுவில் நகராட்சி வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.
இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் அவரிடம் வந்து வாகனத்தை எடுக்குமாறு கூறினர். ஆனால் அவரால் எந்தவித பதிலும் கூற முடியவில்லை. மேலும் வாகனத்தை இயக்கவும் முடியவில்லை.
வீடியோ வைரல்
வாகன ஓட்டிகள் அவரிடம் விசாரணை நடத்திய போது, சரவணன் மது போதையில் நிதானம் இன்றி இருந்து உள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் அவரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் போலீசார் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் சரவணகுமாரை பணியிடை நீக்கம் செய்து குன்னூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். குடிபோதையில் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.