கூடலூரில் 2 அரசு பஸ்கள் பஞ்சராகி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு


கூடலூரில் 2 அரசு பஸ்கள் பஞ்சராகி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
x

கூடலூரில் 2 இடங்களில் அரசு பஸ்கள் நடுரோட்டில் பஞ்சராகி நின்றது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவதியடைந்தனர்.

நீலகிரி

கூடலூர், ஜூன்.9-

கூடலூரில் 2 இடங்களில் அரசு பஸ்கள் நடுரோட்டில் பஞ்சராகி நின்றது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவதியடைந்தனர்.

பழுதான பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கூடலூர் கிளை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கான தளவாட பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் சம்பந்தப்பட்ட துறையால் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கூடலூர் பகுதியில் தினந்தோறும் அரசு பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. இதன் காரணமாக பயணிகள் தங்களது உடைமைகளுடன் பாதி வழியில் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது. இந்த அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பஞ்சராகி நடுரோட்டில் நின்றன

இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு திருப்பூரில் இருந்து கூடலூர் வந்த அரசு பஸ் நடுவழியில் பஞ்சராகி நின்றது. இதனால் கூடலூர்- ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் பஞ்சரான டயரை கழற்றி விட்டு சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.

இதற்கிடையை இதனிடையே பந்தலூரில் இருந்து கூடலூர் வந்த அரசு பஸ் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகே பஞ்சராகி நடுரோட்டில் நின்றது. இதன் காரணமாக பஸ்சில் வந்த பயணிகள் கடும் சிரமத்துடன் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு ஆட்டோக்களில் பயணம் செய்தனர். இதனால் கூடலூர்-கோழிக்கோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூரில் முக்கிய சாலைகளில் அடுத்தடுத்து 2 அரசு பஸ்கள் பஞ்சராகி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர் இருப்பினும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பராமரிக்க வேண்டும்

கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் தினமும் பழுதடைந்து சிரமத்துக்கு உள்ளாகி வருகிறது. இது மட்டுமின்றி நீண்ட தொலை தூரம் இயக்கப்படும் கன்னியாகுமரி விரைவு பஸ்சும் போதிய பராமரிப்பு இன்றி இயக்கப்படுவதால் நடுவழியில் நின்று விடுகிறது. இதனால் அரசு பஸ்களில் பயணம் செய்வது பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து கழக நிர்வாகம் பஸ்களை உரிய முறையில் பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story