கடலூரில் கோவில்களில் உண்டியல்களை உடைத்து திருடிய 2 பேர் கைது


கடலூரில் கோவில்களில் உண்டியல்களை உடைத்து திருடிய 2 பேர் கைது
x

கடலூரில் கோவில்களில் உண்டியல்களை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

கடலூர் மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவிலில் கடந்த 31.7.2022 அன்று மர்மநபர்கள் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் கடந்த 15.8.2022 அன்று இரவு மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு நாகம்மன் கோவில், புதுப்பாளையம் கங்கையம்மன் கோவில், சப்-ஜெயில் ரோட்டில் உள்ள வினைதீர்த்த விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்களின் உண்டியல்களை மர்ம நபர்கள் அடுத்தடுத்து உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடி சென்றனர். கோவில்களை குறிவைத்து மர்ம நபர்கள் திருடிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிப்படை அமைப்பு

இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கோவில்களை குறி வைத்து திருடிய கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் கும்தாமேடு தரைப்பாலம் அருகே தனிப்படை போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வழிமறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள், கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் மகன் பிரவின்குமார் (வயது 21), திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தை சேர்ந்த சரவணன் மகன் சக்தி (19) என்பதும், செல்வ விநாயகர் கோவிலில் திருட முயற்சி செய்ததும், நாகம்மன் கோவில் உள்ளிட்ட 3 கோவில்களின் உண்டியலை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பிரவீன்குமார், சக்தி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் திருட பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story