கூடலூர் பகுதியில்பலத்த காற்றால் வாழை இலைகள் சேதம்:ஒரு கட்டு ரூ.600-க்கு விற்பனை
கூடலூர் பகுதியில் பலத்த காற்றால் வாழை இலைகள் சேதமடைந்தன.
கூடலூர் காஞ்சி மரத்துறை, வெட்டுக்காடு, புதுரோடு தம்மனம்பட்டி, பெருமாள் கோவில் புலம், மந்தை வாய்க்கால், காக்கான் ஓடை உள்ளிட்ட பல்வேறு தென்னை சாகுபடி நடைபெற்றது. தற்போது அந்த பகுதிகளில் தென்னை மரங்களை வெட்டி அகற்றிவிட்டு அதில் சொட்டு நீர் பாசனம் மூலம் புதிய ஒட்டு ரக திசு வாழை பயிர்களை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்து உள்ளனர். வாழை சாகுபடியில் குறிப்பிட்ட காலம் வரை விவசாயிகள் வாழை இலைகளை அறுத்து 5 இலைகளைக் கொண்ட ஒரு மடியை ரூ.20 க் கும் 40 மடி கொண்ட ஒரு கட்டையை ரூ.800-க்கும் விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் வாழையில் உள்ள இலைகள் கிழிந்து சேதமாகிறது. இதன் காரணமாக வாழை இலை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு மடி ரூ.30-க்கும் ஒரு கட்டு ரூ.1,200 வரை விற்பனையாகிறது. வர்த்தக நிறுவனங்களில் பேப்பர் தட்டு, பாக்கு மர தட்டு, மெழுகு இலைகள் விற்பனைக்கு வந்தாலும் வாழை இலைகள் மூலம் உணவு அருந்துவதையே அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். இதனால் தற்போது ஓட்டல் உரிமையாளர்கள் வாழை இலைகளை விற்பனை செய்பவர்களிடம் முன்கூட்டியே பணம் கொடுத்து தங்களுக்கு தேவையான இலைகளை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.