கடலூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கடலூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 March 2023 6:45 PM GMT (Updated: 6 March 2023 6:45 PM GMT)

தொழிலாளி சாவுக்கு காரணமான போலீசாரை கைது செய்யக்கோரி கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

கடலூர்

கடலூர்

கைது செய்ய வேண்டும்

நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில், கடந்த 2015-ம் ஆண்டு சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பி.என்.பாளையத்தை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியன் ஒரு வார காலம் போலீசாரால் துன்புறுத்தப்பட்டு இறந்தார். இதற்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன், போலீஸ்காரர் சவுமியன் ஆகியோர் மீது கொலை வழக்கு மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே சம்பந்தப்பட்ட போலீசாரை பணியிடை நீக்கம் செய்து, அவர்களை தமிழக அரசு கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வடலூர் போலீஸ் நிலையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடலூர் டவுன்ஹாலில் இருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தடுத்து நிறுத்திய போலீசார்

அதன்படி நேற்று கடலூர் டவுன்ஹாலில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பேரணியாக புறப்பட்டனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

பேரணியானது பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் சென்ற போது, அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு செல்லாதபடி தடுப்பு கட்டைகள் அமைத்தும் தடுத்தனர். இதனால் அவர்கள் அங்கேயே நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story