கடலூரில் பூண்டு விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனை


கடலூரில் பூண்டு விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

கடலூரில் பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர்

கடலூர் மாவட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் விற்பனைக்காக கனரக வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. அதனை கடலூர் மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மளிகை கடை வியாபாரிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் வாங்கி செல்கின்றனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை மார்க்கெட்டுகளுக்கு வந்து வாங்கி செல்கிறார்கள். இதற்கிடையே பொதுமக்கள் தினமும் சமையலில் பயன்படுத்தும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை தற்போது அதிகரித்துள்ளது.

இமாச்சல் பூண்டு

கடந்த சில வாரங்களாக பூண்டு, சீரகம் விலை கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது. கடந்த மாதம் ரூ.600, ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சீரகம் தற்போது ரூ.680, ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இமாச்சல் ரக பூண்டு ஒரு கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.240, ரூ.250-க்கு விற்பனையாகிறது.

நாட்டு பூண்டு கிலோ ரூ.200-க்கும், சிறிய ரக பூண்டு ரூ.160 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரூ.150-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ரூ.165 முதல் ரூ.180 வரைக்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட சோம்பு ரூ.350-க்கும், கேழ்வரகு, கம்பு தலா ரூ.45, ரூ.40-க்கும், ரூ.250-க்கு விற்கப்பட்ட மிளகாய் வத்தல் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அதிகரிக்கும்

இதேபோல் பல்வேறு மளிகை பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் பெண்களுக்கு இந்த விலைவாசி உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது. அதனால் சமையலுக்கு பயன்படுத்தும் மளிகை பொருட்களின் அளவு குறைந்துள்ளது. தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால், இந்த விலையேற்றம் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


Next Story