தேவர்சோலையில் செடி-கொடிகள் சூழ்ந்த மின்கம்பம்- அசம்பாவிதம் ஏற்படும் முன், அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தேவர்சோலையில் செடி-கொடிகள் சூழ்ந்த மின்கம்பத்தை அசம்பாவிதம் ஏற்படும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்: தேவர்சோலையில் செடி-கொடிகள் சூழ்ந்த மின்கம்பத்தை அசம்பாவிதம் ஏற்படும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்கம்பம் மீது செடி-கொடிகள்
கூடலூர் தாலுகா தேவர்சோலை புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் தனியார் பள்ளிக்கூடம், வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த பகுதியில் சாலையோரம் மும்முனை மின்சார மின்கம்பம் நிற்கிறது. இந்த மின்கம்பத்தை மரக்கிளைகளும், செடி-கொடிகளும் படர்ந்து மறைத்துள்ளது.
மழைக்காலத்தில் மின்கம்பம் மற்றும் செடி-கொடிகள் ஈரத்தன்மையுடன் காணப்படுகிறது. மின்கம்பம் இருக்கும் பகுதி வழியாக பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தையோ, செடி-கொடிகளையோ தொட்டால் மின்சாரம் தாக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அகற்ற கோரிக்கை
எனவே அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தில் படர்ந்து காணப்படும் செடி-கொடிகள் மற்றும் மரக்கிளைகளை அசம்பாவிதம் ஏற்படும் முன் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
'மின்கம்பத்தை முழுமையாக மறைக்கும் வகையில் செடி-கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் மாணவர்கள், சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். அவர்கள் எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தை அல்லது செடி-கொடிகளை தொடும்போது மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி-கொடிகள் மற்றும் மரக்கிளைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.