தர்மபுரி நகர்பகுதியில்ரூ.1 கோடியில் திட்ட பணிகள்

தர்மபுரி நகரில் உயர் கோபுர மின்விளக்கு, தார்ச்சாலை, சிமெண்டு சாலை உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள திட்ட பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நகராட்சி கூட்டம்
தர்மபுரி நகராட்சி அவசர கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் அண்ணா நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணை தலைவர் நித்யா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தர்மபுரி நகரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 இடங்களில் ரூ.52 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பது, நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு வார்டுகளில் ரூ.52 லட்சத்தில் புதிய தார்ச்சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட ரூ.1 கோடியே 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் திட்ட பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்று வது என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழிப்பிடம் திறக்கப்படுமா?
தர்மபுரி எஸ்.வி. ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகளின் வசதிக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர் வார வேண்டும். ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர். கவுன்சிலர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சித் தலைவர் மற்றும் ஆணையாளர் தெரிவித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் நாகராஜ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளர் மாதையன், கணக்கு அலுவலர் முத்துக்குமார் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.