வெவ்வேறு விபத்துகளில்ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர்.
தொழிலாளி பலி
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). இவர், கெங்குவார்பட்டியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர், புஷ்பராணி நகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
கம்பம் அருகே உள்ள கருநாக்கன்முத்தன்பட்டியை சேர்ந்தவர் தங்கத்துரை (30). கூலித்தொழிலாளி. கடந்த 15-ந்தேதி இவர், கருநாக்கமுத்தன்பட்டியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சமுதாயக்கூடத்தில் இருந்த சிமெண்டு மூட்டைகளை டிராக்டரில் ஏற்றினார். இதில் மூட்டையை தூக்கிகொண்டு வந்தபோது, திடீரென கால் தவறி கீழே இருந்த இரும்பு குழாய் மீது விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.