டிஜிட்டல் பணபரிவர்த்தனையில்இந்தியா முதலிடம்


டிஜிட்டல் பணபரிவர்த்தனையில்இந்தியா முதலிடம்
x

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா உலகின் முதல் நாடாக உள்ளது என விவேகானந்தர் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா உலகின் முதல் நாடாக உள்ளது என விவேகானந்தர் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.

விழிப்புணர்வு கருத்தரங்கு

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தையொட்டி விவேகானந்தா நல்லோர் வட்டம் சார்பில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நேற்று நடந்தது. விழாவில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் வரவேற்றார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உடல், மனம் மற்றும் ஆன்மிக ரீதியாக தெளிவாக இருக்கும் 100 இளைஞர்களை கொடுங்கள், உலகை மாற்றி காட்டுகிறேன் என்று சுவாமி விேவகானந்தர் 1897-ம் ஆண்டு சொன்னார். அவா் சொல்லி 125 ஆண்டுகளை தாண்டியிருக்கிறோம். ஆனால் அவரது கனவு நனவாகியிருக்கிறதா? என்ற கேள்வி இங்கு எழுகிறது.

உடைக்க வேண்டிய கட்டாயம்

நீங்கள் விவேகானந்தரின் கனவை மெய்ப்பிக்க கூடிய மனிதர்களாக வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். சமுதாயம் சொல்கிற நிறைய விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. சில விஷயத்தை உடைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 1983-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றது. ஆனால் அதிர்ஷ்டத்தில் வெற்றி பெற்றதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அந்த போட்டியை பொறுத்த வரையில் கபில்தேவ் வித்தியாசமாக சிந்தித்தார். அப்போது 24 வயதே ஆகியிருந்த கபில் தேவுக்கு அனுபவம் இல்லை. எனினும் துணிவோடும், நம்பிக்கையோடும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். இதை தான் விவேகானந்தர் கூறியுள்ளார்.

இந்தியா விஸ்வகுருவாக வரப்போகிறது என்று 1895 கால கட்டத்தில் விவேகானந்தர் கூறினார். எந்த நாட்டையும் கைப்பற்றாததால் இந்தியா அந்த நிலைக்கு வரும் என்று அவர் கூறினார். தற்போது உலக பொருளாதாரத்தில் நம் நாடு இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவுடன் போட்டி போடும் நிலை ஏற்படும். இந்தியா 2047-ம் ஆண்டு சக்தி வாய்ந்த விஸ்வகுருவாக மாறும். அப்போது விவேகானந்தரின் கனவு நியாயமாக மாறும்.

அடிமையாகி விட்டோம்

2021-ம் ஆண்டில் இந்தியாவில் எவ்வளவு நேரம் வீடியோ பார்த்திருக்கிறோம் என்ற டேட்டா என்னிடம் இருக்கிறது. ஒரு ஆண்டில் 37 சதவீதம் அதிகரிக்கிறது. உலகில் செல்போனில் வீடியோ பார்த்ததில் 5-வது நாடாக நம் நாடு உள்ளது. மேலும் கடந்த மாதத்தில் 21 மணி நேரம் வரை ஒரு மனிதர் வாட்ஸ்அப் பயன்படுத்தி இருக்கிறார். 70 கோடி இந்தியர்கள் இன்டர்நெட் பயன்படுத்துகிறார்கள். நாம் டெக்னாலஜிக்கு அடிமையாகி விட்டோம். படம் பார்க்க வேண்டும். அது தவறு இல்லை. துணிவு, வாரிசு போன்ற படங்களின் டிரைலர் வந்த ஒரு மணி நேரத்தில் 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

அதே சமயம் இளைஞர்களுக்கு கனவு உள்ளது. அது விவேகானந்தர் பாறை போல உள்ளது. அந்த கனவை எட்டிப்பிடிக்க வேண்டும் என்றால் ஆக்ரோஷமான அலைகளை கடந்து செல்ல வேண்டும். தடங்கல்கள் மற்றும் பிரச்சினைகளை தாண்டி செல்ல வேண்டும்.

துணிவோடு...

சமுதாய கட்டமைப்பில் இளைஞர்கள் மாட்டி இருக்கிறார்கள். 2018-ம் ஆண்டு 77 ஆயிரம் பேர் என்ஜினீயரிங் படித்துள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் என்ஜினீயரிங் படித்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் அவர்களில் பலருக்கும் வேலை கிடைக்கவில்லை. படிக்கும் படிப்பு பேஷன் ஆகிவிட்டது. நிறைய பேரின் படிப்பை சமுதாயம் தான் தீர்மானிக்கிறது. எனவே அதை உடைக்க வேண்டும்.

உங்களுக்கு தேவையானதை படிக்காமல் யாரோ சொல்வதை படிக்காதீர்கள். போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். அதோடு சில நேரங்களில் துணிவு இருந்தாலும் சமயோஜித புத்தியும் வேண்டும். பிரதமா் வாஜ்பாயிடம் துணிவோடு சமயோஜித புத்தியும் இருந்ததால் தான் அணுகுண்டு சோதனை செய்து காட்ட முடிந்தது.

டிஜிட்டல் பரிவர்த்தனை

பிரதமர் மோடி 2016 நவம்பர் 8-ந் தேதி பணமதிப்பிழப்பு செய்தார். எதிர் கட்சிகள் எவ்வளவோ பொய் பிரசாரங்கள் செய்தாலும் தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா உலகில் முதல் நாடாக உள்ளது. பண ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்திருக்கிறோம்.

எனவே விவேகானந்தர் கூறிய அறிவுரைகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். விவேகானந்தருக்கு குருவாக ராமகிருஷ்ணர் இருந்தது போன்று நீங்களும் ஒரு குருவை கண்டுபிடியுங்கள். குரு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். குரு இல்லாமல் வாழ்வது கடலை எதிர்த்து நீச்சலடிப்பது போன்றது. குருவோடு வாழ்வது கடலோடு சேர்ந்து நீச்சலடிப்பது போன்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாவட்ட தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான அய்யப்பன், பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story