தி.மு.க ஆட்சியில் கமிஷன் அதிகமாக கேட்பதால், பணிகளை எடுக்க யாரும் முன்வரவில்லை - எடப்பாடி பழனிசாமி


தி.மு.க ஆட்சியில் கமிஷன் அதிகமாக கேட்பதால், பணிகளை எடுக்க யாரும் முன்வரவில்லை - எடப்பாடி பழனிசாமி
x

மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணம், சொத்து வரியை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது என எடப்பாடி கூறினார்.

சேலம்,

சேலத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வரும் வரை பொதுக்குழு கூட்ட மாட்டோம் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளோம்.

இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து தற்போது வரை மெத்தனப்போக்குடன்தான் செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்குமே தெரியும்.சென்னையில் மழைநீர் வடிக்கால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது;

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகளை தான் தி.மு.க. தொடர்கிறது. எந்த புதிய, பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

அ.தி.மு.க. அரசின் திட்டங்களையே தி.மு.க. திறந்து வைத்து வருகிறது.திமுக அரசு அமைந்தபிறகு, ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை அறிவித்து, அதற்கான பணிகள் நடைபெறுகிறது என்றால் அப்படி எதுவும் இல்லை.

மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தியுள்ளது.

மின் கட்டணம், சொத்து வரி உயர்வை மக்களால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?;

தி.மு.க. ஆட்சியில் மக்கள் துன்பத்தையும் வேதனையும் தான் உள்ளார்கள்.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் பணிகள் முடிக்கப்பட்டது, அதை திறந்து வைக்கிறார்கள். அதேபோல், சட்டக்கல்லூரி பணிகள் முடிக்கப்பட்டது அதை திறந்து வைக்கிறார்கள். இதுபோல இன்னும் பல்வேறு பணிகள் அதிமுக ஆட்சியில் முடிவுற்ற பணிகளை எல்லாம் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவையில் சுமார் ரூ.48 கோடியில், 133 பணிகளுக்கு, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கிட்டத்தட்ட 11 முறை தள்ளிவைத்துள்ளனர். அதற்கு காரணம் கமிஷன் அதிகமாக கேட்பதால், பணிகளை எடுக்க யாரும் முன்வரவில்லை. அதேபோல், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், கிராமங்கள் வரை வளர்ச்சிப் பணிகள் எல்லாம் முடங்கிக் கிடக்கிறது என கூறினார்.


Next Story