ஈரோடு மாநகராட்சியில் ரூ.15¾ கோடி செலவில் தெரு விளக்குகள் பொருத்தும் பணி அதிகாரி தகவல்
ஈரோடு மாநகராட்சியில் ரூ.15¾ கோடி செலவில் தெரு விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என அதிகாரி தகவல்
ஈரோடு மாநகராட்சியில் ரூ.15¾ கோடி செலவில் தெரு விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
தெரு விளக்குகள்
ஈரோடு மாநகராட்சியில் தெரு விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர். இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சியில் புதிய தெரு விளக்குகள் அமைப்பதற்காக ரூ.15 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலமாக 5 ஆயிரத்து 431 எல்.இ.டி. தெரு விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் சோமசுந்தரம் கூறியதாவது:-
உயர் மின்கோபுரங்கள்
ஈரோடு மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 23 ஆயிரத்து 721 எல்.இ.டி. தெரு விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தெரு விளக்குகள் 2 ஆயிரத்து 228 தானியங்கி கட்டுப்பாட்டு கருவிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. அதன் மூலமாக இரவு முதல் அதிகாலை வரை ஒளிரவிடப்படுகிறது. மேலும், தெரு விளக்குகளின் செயல்பாடுகள் ஆன்லைன் மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது.
இந்தநிலையில் புதிய எல்.இ.டி. மின் விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்படுகிறது. இதேபோல் ஈரோடு மாநகராட்சியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 56 உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், ரூ.75 லட்சம் செலவில் ஈரோடு மாயவரம், முத்தம்பாளையம், காளைமாட்டுசிலை, மரப்பாலம், வெண்டிபாளையம், பெரியார்நகர் உள்பட மொத்தம் 15 இடங்களில் புதிதாக உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.